கொண்டாட்டத்தில் தாலிபன்கள்! ஆப்கானில் இனி என்ன நடக்கும்?
ஆப்கானிஸ்தானைவிட்டு இன்று அமெரிக்கப் படையின் கடைசி விமானமும் வெளியேறிவிட்டது. ``எங்கள் நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டது'' என்று கொண்டாடி வருகிறார்கள் தாலிபன்கள் - ஆப்கனில் இனி என்ன நடக்கும்?
காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகளை வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள் தாலிபன்கள். வான் நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுடும் சத்தம் காபூல் விமான நிலையத்தைத் தாண்டி, காபூல் நகருக்குள்ளும் கேட்டுக் கொண்டிருப்பதாக அங்கிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இன்றோடு, அமெரிக்கப் படைகள் முழுவதுமாக ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறியதுதான் தாலிபன்களின் கொண்டாட்டத்துக்குக் காரணம். செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரக் கட்டடத்தைத் தகர்த்தது அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு. உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைச் செய்துமுடித்த அல்-கொய்தாவுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகச் சொல்லி, ஆப்கனுக்குள் நுழைந்தன அமெரிக்கப் படைகள்.
கூடவே நேட்டோ நாடுகளின் படை வீரர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டது அமெரிக்கா. ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தாலிபன்கள், காபூல் நகரைத் தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், காபூல் விமான நிலையத்தின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகளிடமே இருந்தது. தற்போது காபூல் விமான நிலையமும், தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்துவிட்டது.
இதைக் கொண்டாடும் வகையில், வான வேடிக்கைகள் நிகழ்த்தியும், துப்பாக்கிக் குண்டுகளை வான்நோக்கி சுட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள் தாலிபன்கள். அமெரிக்கா வெளியேறிய நிலையில், `இனி ஆப்கனில் என்ன நடக்கும்?' என்ற கேள்விக்கு, ``தாலிபன்கள் கையில் முழுமையாகச் சென்றிருக்கிறது ஆப்கானிஸ்தான்.
கையில் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவதும், ஒரு நாட்டை நிர்வாகம் செய்வதும் ஒன்றல்ல. பெரும்பாலான உலக நாடுகள் தாலிபன் ஆட்சியை அங்கீகரிக்கவே தயாராக இல்லை. அப்படியிருக்கையில், உலக நாடுகளைச் சமாளித்து நட்புறவு ஏற்படுத்துவதே தாலிபன்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும். ஏற்கெனவே ஆப்கனின் பொருளாதார நிலை மந்தமாக இருக்கிறது.
அமெரிக்காவின் வெளியேற்றத்துக்குப் பின்னர், பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சியைச் சந்திக்கும். பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்யும் அளவுக்குத் தாலிபன்களிடம் பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே! இருக்கிற பிரச்னைகள் போதாதென்று, தாலிபன்களோடு முட்டி மோதிக்கொள்ளத் தயாராக இருக்கிறது ஐஎஸ்ஐஎஸ் - கே என்றழைக்கப்படும் கோராசன் பயங்கரவாத அமைப்பு.
அவர்களைச் சமாளிப்பதற்கு தாலிபன்களிடம் என்ன திட்டமிருக்கிறது என்று தெரியவில்லை. இந்தச் சூழலில், 1.8 கோடி ஆப்கன் மக்கள், அதாவது கிட்டதட்ட ஆப்கன் மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையினால் திண்டாடி வருகின்றனர் என்கிறது ஐ.நா அமைப்பு.
மேலும், ஆப்கனில் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் ஊட்டச் சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் ஐ.நா தெரிவிக்கிறது. வறட்சி, வறுமை என்று நாட்டு மக்கள் ஏற்கெனவே பெரும் கஷ்டத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த நிலையில், தாலிபன்கள் கையில் ஆட்சி சென்றிருப்பது வேதனைக்குள்ளான விஷயம். இனி அந்த நாட்டின் நிலை எப்படியிருக்கப் போகிறது என்று நினைத்துப் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.