வவுனியா பாடசாலையொன்றில் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சிக்கினர்!
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்று (14-01-2024) பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனர்.
பாடசாலைக்கு அருகே உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர்.
இதன்போது கடந்த வெள்ளிக்கிழமை (12-01-2024) மதியம் ஒருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது.
சிசிரிவி காட்சியின் உதவியுடன் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த தொலைக்காட்சியினை விற்பனைக்கு வழங்கியமை தெரியவந்தமையினையடுத்து சுமார் 8 மணிநேர குறுகிய நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.
வவுனியா சுந்தரபுரம் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.