8 மில்லியன் மதிப்பான காரை திருடிய சந்தேக நபர் கைது
வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை தொடர்பில், கடந்த 2025.10.21ஆம் திகதியன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தடுப்புக் காவல் உத்தரவு
அதற்கமைய, திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய, யட்டகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் எல்பிட்டிய மற்றும் பத்தேகம பொலிஸ் பிரிவுகளில் 02 முச்சக்கர வண்டிகளைத் திருடியதுடன், ஹோமகம பகுதியில் 02 மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (28) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 7 நாள் பொலிஸ் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.