அப்பிள் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ; ஐபோன் 18 விலையில் அதிரடி முடிவு
அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 18 (iPhone 18) சந்தைக்கு வரவிருக்கும் வேளையில், அதன் விலை குறித்து ஒரு முக்கிய தகவல் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
உலகளவில் உதிரிபாகங்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், அப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்தாமல் இருக்க முடிவெடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் தொலைபேசிகளின் RAM விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. முன்னனி நிறுவனங்களான Samsung மற்றும் SK Hynix ஆகிய நிறுவனங்கள் சிப் விலையை 80% முதல் 100% வரை உயர்த்த முயன்றன.

இருப்பினும், அப்பிள் நிறுவனம் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 10% - 25% அளவிலான உயர்விற்கு மட்டுமே உடன்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரித்திருந்தாலும், ஐபோன் 17 இன் அதே ஆரம்ப விலையிலேயே ஐபோன் 18 யும் அறிமுகம் செய்ய அப்பிள் திட்டமிட்டுள்ளது.
தங்களது இலாப வரம்பை சற்றே குறைத்துக் கொண்டாவது, சந்தையில் தனது பங்களிப்பைத் தக்கவைத்துக் கொள்வதே அப்பிள் நிறுவனத்தின் நோக்கமாகத் தெரிகிறது.
சாதனங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் உடனடி இலாபத்தை விட, அதன் பின்னர் வழங்கப்படும் மென்பொருள் மற்றும் சேவைகள் மூலம் அந்த இலாபத்தை ஈடுகட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அப்பிள் நிறுவனம் தனது விற்பனை விலையை மாற்றாமல் இருப்பது அதன் போட்டி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.