பல முச்சக்கர வண்டிகளைத் திருடிய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது
ஹோமாகம மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல முச்சக்கர வண்டிகளைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) மதியம், ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவான பகுதியில் ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி திருட்டு
இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றில் 20 கிராம் 830 மில்லிகிராம் ஹெரோயினுடன் பயணித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, ஹோமாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நிக்கவரட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவர் ஹோமாகம, மகரகம மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நான்கு முச்சக்கரவண்டிகளைத் திருடிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நான்கு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், ஹோமாகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.