பல மனித படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் சிக்கினார்
நாட்டில் இடம்பெற்ற நான்கு மனித படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹோமாகம பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை
மேல் மாகாண தெற்கு பிராந்திந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலவிலவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய கொனபொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டிருந்தார். இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்த குறித்த சந்தேகநபர் அண்மையில் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், தலைமறைவாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சந்தேக நபர் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழுக்களின் தலைவர் என அறியப்படும் மன்னா ரமேஷின் பிரதான உதவியாளராகச் செயற்பட்ட துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் அதேவருடம் மே மாதம் 26 ஆம் திகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதே வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி அவிசாவளை பிரதேசத்தில் மூவரை சுட்டுக் கொன்றமை மற்றும் மற்றொருவருக்கு காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.