யாழ். முருகையா தேவஸ்தான திருவிழாவில் ஏலத்தில் பத்து லட்சம் ரூபாய்க்கு மாம்பழம்
யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதன் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு முருகனுக்கும் விநாயகப் பெருமானிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக சுற்றி முதலில் வலம் வருபவருக்கே மாம்பழம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்ல விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியாருமான பெற்றோரை வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.
இச் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாடகம் இடம் பெற்றதைத் தொடர்ந்து மாம்பழம் ஏலம் கூறப்பட்டது இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு சில நொடிகளில் 6 லட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 10 லட்சம் ரூபா விற்கு இறுதியாக ஏலம் விடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.