67வது மாடியில் இருந்து விழுந்த மாணவர்கள்; நடந்தது என்ன ?பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு கொம்பனித்தெருவில் ஒல்டேயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02) கீழே விழுந்து 15 வயதுடைய சிறுமியும் சிறுவனும் காதல் உறவு இருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் தற்போது சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணை
உயிரிழந்த இருவரும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ம் வகுப்பில் பயின்று வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பாடசாலை முடிந்ததும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அங்கு உடைகளை மாற்றிக்கொண்டு, காலணிகளை கழற்றி பைகளையும் அங்கு வைத்துவிட்டு படிக்கட்டுகள் வழியாக 67வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
70 மாடிகளைக் கொண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் உள்ள குளிரூட்டும் பகுதியில் மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அங்கு பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் மீது அவர்களின் உடல்கள் மோதி பலத்த காயம் ஏற்படிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் வெள்ளவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மாணவி களனி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் என கூறப்படும் நிலையில் மாணவர்களின் உயிரிழப்பு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.