கொழும்பு யுவதியின் புகைப்படங்களை ஆபாசமாக எடிட் செய்து இணையத்தில் பரப்பிய இளம் பெண்!
கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் இளம் பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து , அவற்றை டிஜிட்டல் முறையில் ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான இளம் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று அபராதமும் இழப்பீடும் விதித்தார்.

சந்தேகநபருக்கு அபராதமும், இழப்பீடும்
இரண்டு தனித்தனி குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு தலா ரூ.2,500 அபராதமும், ரூ.25,000 இழப்பீடும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொத்தமாக ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு நேற்று மீண்டும் அழைக்கப்பட்டபோது, சந்தேகநபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப்புலனாய்வு துறையின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு (CID) சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
மேலும், சந்தேகநபர் கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் முன்னாள் மாணவி என்றும், தற்போது தனியார் விண்ணப்பதாரராக பொதுத் தர உயர்தர (GCE Advanced Level) பரீட்சைக்கு தோற்றவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.