5வது நாளிலும் தொடரும் உண்ணாவிரதம் ; நிரந்தர நியமனம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்
தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தமக்கு, ஆசிரியர் சேவையில் முறையான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனக் கோரி ஜனவரி 26 ஆம் திகதி முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புகளும் போராட்டக்களத்துக்கு வந்து எமக்கு ஆதரவாக நின்ற போதிலும், அரச தரப்பினர் எம்மைப் பொருட்படுத்தவில்லை என்றும், இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது ஆசிரியர் பணிக்கான தகுதிகள் இருந்தும், தங்களைத் 'அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்' என்ற வரையறைக்குள் வைத்திருப்பது அநீதியானது எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகள் "தேர்வு மூலமே நியமனம் வழங்கப்படும்" எனப் பிடிவாதமாக இருப்பதால், இந்தப் போராட்டம் தொடர்கிறது.
போராட்டக்காரர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும், தமது நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை களத்தை விட்டு நகரப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் நேற்றும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது ஒருவர் மாத்திரம் தொடர்ந்து இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதுடன், ஏனையோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகவே உள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.