தினமும் காலையில் பப்பாளி சாப்பிடுபவர்கள் இதை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்
பழங்களில் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் தான் பப்பாளி. இந்த பழத்தின் விதைகளில் மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் போன்றவற்றுடன், பீட்டா கரோட்டீன், கரோட்டினாய்டுகள் போன்றவைகளும் உள்ளன.

இப்படிப்பட்ட பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலினுள் நல்ல மாற்றங்களைக் காணலாம். இப்போது பப்பாளியை காலை உணவின் போது ஒரு கப் உட்கொண்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காண்போம்.

எடை இழப்புக்கு உதவும்
நீங்கள் உடல் எடையை அல்லது தொப்பையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் காலை உணவாக 1 கப் பப்பாளியை தினமும் சாப்பிடுங்கள். இப்படி பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். முக்கியமாக பப்பாளியில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்துக்களும் அதிகம். எனவே எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி நல்ல பலனைத் தரும்.

இதயத்திற்கு நல்லது
பப்பாளியில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்தும் இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவும். ஏனெனில் இந்த சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை இயல்பாக்கவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. பப்பாளியில் சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

கல்லீரலுக்கு நல்லது
பப்பாளியில் உள்ள ஹைப்போலிபிடெமிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கல்லீரல் சேதத்தை தடுக்கவும், அழற்சிக்கு எதிரான சைட்டோகைன்களை அடக்குவதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் பப்பாளியில் கோலின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சேர்மங்களும் உள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன, இது கீல்வாதம் அல்லது கொழுப்பு கல்லீரல் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகளை நிர்வகிப்பதில் சிறந்தது. அதோடு பப்பாளி செரிமானம் மற்றும் குடல் ஒழுங்கை சீராக்குவதன் மூலம், கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகின்றன.

சருமம் பொலிவு பெறும்
பப்பாளியில் உள்ள நொதிகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இறந்த சரும செல்களை நீக்கவும், சருமத் துளைகளை சுத்தப்படுத்தவும், சரும சுருக்கங்களை தடுக்கவும் உதவுகின்றன. இந்த பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வரும் போது, அது குடல் செயல்பாட்டை மென்மையாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது

மலச்சிக்கல் நீங்கும்
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அதிகம் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால் காலையில் தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுவும் இதில் உள்ள செரிமான நொதிகள் உணவுகளை எளிதில் உடைத்தெறித்து, வயிற்றை முழுமையாக சுத்தம் செய்ய உதவி புரியும்.
