பிரபல அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் விசித்திர மோசடி ; விழி பிதுங்கும் வர்த்தகர்கள்
கையடக்க தொலைபேசிகள் ஊடாக முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு வரவு வைக்கப்பட்டதாகக் கூறி போலி ரசீதுகளைக் காட்டி ஏராளமான நிதி மோசடிகளைச் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக வலைத்தளங்களுக்கான விசாரணைப் பிரிவுக்கு நபரொருவர் அளித்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாய்க்கு கேட்ட தொகை
பிரபல அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் போல காட்டிக்கொண்ட சந்தேகநபர், முறைப்பாட்டாளரிடம் இருந்து 85,000 ரூபா பெறுமதியான வளர்ப்பு நாய் ஒன்றை எடுத்துச்சென்று பணத்தை திருப்பி வழங்கவில்லை என மேற்படி முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நாய்க்காக கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் ரசீதை அவரது கையடக்க தொலைபேசிக்கு அனுப்பிய பிறகு, அவர் தனது சொந்த செலவில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பில் உள்ள முகவரியொன்றுக்கு முச்சக்கர வண்டியில் நாயை அனுப்பியதாக குறிப்பிட்டார்.
ஆனால், அந்த ரசீது போலியானது என்பது பின்னர் தெரியவந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.
1 மில்லியன் ரூபா மதிப்புள்ள கேக்
சந்தேக நபர் போலி ரசீதைப் பயன்படுத்தி நாவல பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையிலிருந்து 31,187 ரூபாவுக்கான இறைச்சியைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதே வழியை கையாண்டு 200,000 ரூபா மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டியையும் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த முறையைப் பயன்படுத்தி சந்தேக நபர் அதிக அளவு உணவைப் பெற்றுள்ளார், அதில் சுமார் 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள கேக்குகளும் அடங்கும்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரின் வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் மோசடியாகப் பெறப்பட்ட பல கேக்குகள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.