மின்சாரக் கொள்கை இறுதி முன்மொழிவு மீண்டும் மக்கள் பார்வைக்கு
நாட்டின் மின்சாரக் கொள்கை தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட இறுதி முன்மொழிவு அறிக்கை, மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நேற்று (17) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மின்சாரக் கொள்கை தொடர்பாக மக்கள் கருத்துக்களை முன்வைக்க ஏற்கனவே 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த காலப்பகுதியில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கொள்கையில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இந்த இறுதி முன்மொழிவு அறிக்கை தற்போது மீண்டும் மக்கள் கருத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை நாளை (19) வரை சமர்ப்பிக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் வலுசக்தித் துறையில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய கொள்கையை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.