வடக்கில் வாகன ஓட்டுநர்களின் விதிமீறல் ; கண்காணிப்பு தீவிரம்
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய 'மீட்டல் பயிற்சி' வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தனியார் பேருந்து அல்லது அரச பேருந்துகளாக இருப்பினும், பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி செயல்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.