மத்தள விமான நிலையத்தை தனியாருக்கு வழங்க இலங்கை அரசு திட்டம்
இலங்கை அரசு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை (Mattala Rajapaksa International Airport) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
இதற்காக 30 ஆண்டுகள் கால குத்தகை அடிப்படையில் (BOT – Build-Operate-Transfer) திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கான விருப்பப் பிரகடனங்களை (EOI) வரும் ஜூன் 9ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பல ஆண்டுகளாக குறைந்த பயன்பாட்டால் நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த விமான நிலையத்தை நவீன விமான போக்குவரத்து மையமாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
கொழும்பிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், 2013ஆம் ஆண்டு சீனாவின் எக்ஸிம் வங்கியின் கடன் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது.
எனினும், போதிய விமான சேவைகள் மற்றும் பயணிகள் வருகை இல்லாததால், இது “உலகின் வெறிச்சோடிய விமான நிலையம்” எனவும் குறிப்பிடப்பட்டு வந்தது.
இதற்கிடையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம் தொடர்பாக இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னணியில், இந்த புதிய நகர்வு பிராந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்குப் பிறகு, இலங்கை–இந்தியா வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெற்று வரும் சூழலில் இந்த முதலீட்டு வாய்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.