மத்திய கிழக்கு பதற்றம் ; குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கைமுதலீட்டு வழிகாட்டி இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளைமத்திய கிழக்கு பிராந்தியத்தில் திடீரென தீவிரமடைந்துள்ள பாதுகாப்புப் பதற்றம் காரணமாக, முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயர் பிரான்ஸ்’அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் குறிப்பிட்ட வான்வெளிப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவே இக்கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எயர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சவூதி தலைநகர் ரியாதிற்கான விமான சேவைகள் ஜூலை 24 ஆம் திகதி வரையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரத்திற்கான சேவைகள் ஜூலை 27 ஆம் திகதி வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, லெபனானின் பெய்ரூட் நகருக்கான விமான சேவைகள் எதிர்வரும் ஒகஸ்ட் இரண்டாம் திகதி வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வான்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் தடை மற்றும் சேவைகள் ரத்து காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்யவிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரங்களை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் எயர் பிரான்ஸ் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.