உயிரிழப்பதற்கு கூட தயார்; ரஷ்ய இராணுவத்தில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள்; மாதம் 3000 டொலர் சம்பளம்!
ரஷ்ய குடியுரிமை பெறும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
உயிரிழப்பதற்கு கூட தயார்
இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர் ஒருவர் மாதம் 3000 அமெரிக்க டொலர் (சுமார் 9 இலட்சம் இலங்கை ரூபா) சம்பளமாக பெறுவதாக இலங்கையர்கள் தெரிவித்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பல இராணுவத்தினர் தற்போது ரஷ்ய இராணுவத்தில் இணைவதற்கு முயற்சிப்பதாகவும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நல்ல நேரத்தை வழங்குவதற்காக உக்ரைன் இராணுவத்தால் கொல்லப்படுவதற்கு கூட தயாராக இருப்பதாகவும் அல் ஜசீராகூறியுள்ளது.
அதேவேளை இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 27 வயதான நிபுன சில்வா இந்த மாத தொடக்கத்தில் உக்ரைன் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவருடன் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 36 வயதான சேனக பண்டார அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
டொனெட்ஸ்க் நகரில் உள்ள பதுங்கு குழியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது உக்ரைன் இராணுவத்தின் ஆளில்லா விமானத் தாக்குதலில் நிபுன உயிரிழந்ததாக சேனக பண்டார தெரிவித்ததாகவும் அல் ஜசீரா கூறியுள்ளது.