மியான்மார் சைபர் குற்ற மையங்களில் மேலும் பல இலங்கையர்கள்
கடந்த சில வாரங்களில், மியான்மாரில் உள்ள சைபர் குற்ற மையங்களில் 11 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
இவர்கள், உயர்ந்த ஊதியம் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு எனும் போர்வையில் மனித கடத்தல் மூலம் மியான்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சைபர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசா
இதில், டுபாய் மற்றும் தாய்லாந்து வழியாக சுற்றுலா விசாக்களில் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மியாவடி பகுதியில் உள்ள சைபர் குற்ற மையங்களில் வலுக்கட்டாயமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழு இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சட்டவிரோத இடம்பெயர்வு வழிகளைத் தவிர்க்கவும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அங்கீகரிக்கப்பட்ட வழிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சு, மியான்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுடன் இணைந்து, இவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.