இராவணனால் மறைத்து வைக்கப்பட்டுள்ள விமானங்களை தேடும் திட்டம் ஆரம்பம்
சுமார் 25 இடங்களில் இராவணனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 19 விமானங்களை கண்டுபிடிக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆராய்ச்சிப் பிரிவு தயாராகி வருகிறது.
அடையாளம் காணப்பட்ட 25 இடங்கள் குறித்த பல குறிப்பிட்ட விபரங்களை இந்தப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
விமானங்களை தேடும் திட்டம்
இந்த விமானங்கள் இராவணனால் தயாரிக்கப்பட்டதாகவும், பாதரசம் மற்றும் பிற இரசாயனங்களைப் பயன்படுத்தி அவை பறக்கவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குருநாகல், வாரியபொல, சிகிரியா, தம்புள்ள, பதுளை, மஹியங்கனை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலும் நிலத்தடியிலும் விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆராய்ச்சிப் பிரிவின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் முகாமையாளர் நுரங்க அதிகாரி, கார்பன் சோதனை மூலம் மட்டுமே இந்த விமானங்களின் இருப்பிடங்களை உறுதியாக தீர்மானிக்க முடியும்.
இருப்பினும், ஒரு கார்பன் சோதனைக்கு ரூ. 2 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்றும், அமெரிக்காவில் மட்டுமே செய்யக்கூடிய அத்தகைய சோதனைகளை நடத்துவதற்கான தொழில்நுட்ப திறன் இலங்கையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விமானங்களை தேடும் திட்டம் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுடன், போதுமான அரச நிதி இல்லாததால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் பல உள்ளூர் மற்றும் இந்திய நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில்,அடுத்த ஆண்டுக்குள் தேடலை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுரங்க குறிப்பிட்டுள்ளார்.