இந்தியாவிடம் போராடி தோற்ற இலங்கை அணி ; T20 வரலாற்றில் இலங்கை புதிய உச்சம்
இந்திய அணிக்கு எதிரான 4வது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை வீராங்கனைகள் இன்று (28) தோல்வியைத் தழுவினர்.
இருப்பினும், முன்னைய போட்டிகளில் பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீராங்கனைகளின் திறமையில் இப்போட்டியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண முடிந்தது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 222 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீராங்கனைகள் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.
இலங்கை அணிக்கு அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த ஹசினி பெரேரா 20 பந்துகளில் 33 ஓட்டங்களையும், சமரி அத்தபத்து 37 பந்துகளில் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களைத் தவிர, ஹர்ஷிதா சமரவிக்ரம 13 பந்துகளில் 20 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 11 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.