சவுதியில் சிக்கித் தவித்த இலங்கை பணிப்பெண் ; சமூக வலைத்தள காணொளியால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சவுதியில் பணிபுரிந்து வந்த மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவர், தான் பணிபுரிந்த வீட்டில் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளார்.
குறித்த பணிப்பெண் தனக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என்றும், மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவும், தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுத்து சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தக் காணொளி தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, அவரது உறவினர்களை நேரடியாக சந்தித்து நிலைமையை கேட்டறிந்தவர்கள், பிரச்சினை தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த அமைச்சர், சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளின் நடவடிக்கைகளின் மூலம் குறித்த பணிப்பெண் தற்போது எவ்வித சிக்கல்களுமின்றி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

