பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள்
கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே முன்னெடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 19ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 'சோமிரச' என்ற மீன்பிடிப் படகில் பயணித்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த ஆகியோரே பங்களாதேஷ் கடற்பரப்பில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதில் இருந்த மீனவர் ஒருவர் மற்றொரு படகின் உதவியுடன் கரையை அடைந்தார்.

எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
படகில் கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி வசதி இல்லாத காரணத்தால், அவர்கள் இருந்த இடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும், கடல் நீரோட்டத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு படகு தொலைதூரப் பகுதிகளுக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததையடுத்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பை அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதுடன், அந்நாட்டு மீனவர்கள் குழுவொன்றினால் தந்தையும் மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் முதற்கட்டமாக ஒரு நாள் பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டதுடன், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்பான தகவல் கிடைத்தவுடன், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இருவரையும் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.