போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் கைது
போலி கனடா கடவுச்சீட்டு மற்றும் போலியான குடியேற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, குறித்த நபர் நேற்று முன்தினம் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சின்னப்பு சுபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் படி, அவர் கடந்த 23ஆம் திகதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்து, சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்திற்கான புறப்பாட்டு நடைமுறைகளை நிறைவு செய்திருந்தார்.
எனினும், அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக சோதனையில், சிங்கப்பூர் செல்லும் பயணச்சீட்டை பயன்படுத்தாமல், பிற்பகல் 2.00 மணியளவில் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் உள்ள குடிவரவு பிரிவு ஊடாக லண்டன் நோக்கிச் செல்லும் எயார் இந்தியா AI-133 விமானத்தில் ஏற முயன்றது கண்டறியப்பட்டது.
மேலும் விசாரணையில், அவர் தனது உண்மையான இலங்கை கடவுச்சீட்டை மறைத்து வைத்திருந்ததுடன், 'சிவராஜா தக்ஷன்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இந்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.