பாதயாத்திரீகர்களுடன் பயணித்த நாயை உதைத்த நபர் கைது
அம்பாறை கல்முனைக்குடி பிரதான வீதியில் கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் வந்த ‘சுப்பிரமணியன்’ என அழைக்கப்படும் நாயை உதைத்த நபர் ஒருவர் கல்முனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பொதுமக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனைக்குடி பகுதியில், அஷ்ரப் வைத்தியசாலைக்கு அருகில் பழக்கடை நடத்தி வரும் ஒருவரால் குறித்த நாய்க்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தன.
வாயில்லா ஜீவன்களிடம் இரக்கம் காட்ட வேண்டிய நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, கல்முனை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.