பிரான்ஸ் அரசியலில் தமிழர் தடம் ; இலங்கை வம்சாவளி அதிதியா, பெரிஸில் பிரதி மேயராக நியமிப்பு
பிரான்ஸின் பெரிஸ் நகருக்கு அருகிலுள்ள பொன்டோ-கொம்போல்ட் (Pontault-Combault) மாநகரசபையின் பிரதி மேயராக 25 வயதேயான இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அதிதியா அனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அகதிகளின் புதல்வியான இவர், தனது 19 வயதிலேயே நகர சபை உறுப்பினராகத் தெரிவானார்.
தனது கடின உழைப்பு, கொள்கை உறுதி மற்றும் தான் வாழும் நகரத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் இவர் சிறந்து விளங்கினார்.

2026 மார்ச் மாதம் பொன்டோ-கொம்போல்ட் நகரின் பிரதி மேயராக நியமிக்கப்பட்ட அதிதியா, உள்ளூர் ஆட்சி நிர்வாகம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறையைப் பூர்வீகமாகக் கொண்ட அனந்தராசா குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது குடும்பப் பின்னணி மற்றும் ஆரம்பகால அனுபவங்களே அரசியலில் தனக்கு ஆழ்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இளைஞர் விவகாரங்களுக்கான மாநகர சபை உறுப்பினராக (2020-2026) பணியாற்றிய போது, 11 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டோருக்கான திட்டங்கள், "Quartier Jeunes" எனும் செயற்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வுப் பட்டறைகளை அவர் முன்னெடுத்திருந்தார்.
இவரது இந்தப் புதிய நியமனம், மேலும் பல இளைஞர்களை அரசியலுக்கும் தலைமைத்துவப் பணிகளுக்கும் வருவதற்கு ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.