மலேசியாவில் சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்
இலங்கைத் தமிழ் விவாதக் கழகத்தின் (Tamil Debaters’ Council) தேசிய மேம்பாட்டுக் குழுவினர், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தினால் (UUM) ஏற்பாடு செய்யப்பட்ட "சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0" சர்வதேசப் போட்டியில், மலேசியாவுக்கு வெளியே இருந்து கலந்துகொண்டு கிண்ணத்தை வென்ற முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.

வரலாற்றுச் சாதனை
இதன் மூலம் இலங்கையின் சர்வதேச தமிழ் விவாத வரலாற்றுப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியைப் பதிவு செய்த இலங்கை தேசிய மேம்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த மாணவர்கள்,
ஹரிஷ் ஜெயரூபன் – கொழும்பு ரோயல் கல்லூரி (அணித் தலைவர்)
மைக்கேல் ஜனுஷன் – யாழ்ப்பாணம் சென்.பெட்ரிக்ஸ் கல்லூரி
சிவாஜினி பிரதீபன் – பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை
லக்ஸ்மிதா சிவசங்கரன் – திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
மேலும், மலேசியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற விவாதக் களங்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பல அணிகள் பங்கேற்றன.
இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரிஸ்வி (Rizvi), கோலாலம்பூரில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தில் மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
மாணவர்களின் ஒழுக்கம், கல்வித்திறன் மற்றும் இலங்கையின் கௌரவத்தைச் சர்வதேச மட்டத்தில் உயர்த்தியமைக்காக அவர் பாராட்டு தெரிவித்தார்.
இலங்கை - மலேசியா இடையே விவாதம் மற்றும் கலாசார சுற்றுலா அடிப்படையிலான பரிமாற்றத் திட்டங்களை ஆண்டுதோறும் முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மலேசியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வரலாறு குறித்து விளக்கிய உயர்ஸ்தானிகர், மலேசிய இலங்கைத் தமிழர் சங்கத்தின் (Ceylonese Association of Malaysia) தலைவருடன் மாணவர்களைத் தொடர்புகொள்ளச் செய்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வழிவகை செய்தார்.
இலங்கையிலிருந்து பாடசாலை மட்டத்தில் மலேசியா சென்ற மிகப்பெரிய மாணவர் குழு இதுவாகும். ஒரே பயணத்தில் மலேசியாவின் 5 வெவ்வேறு மாநிலங்களில் (கெடா, கோலாலம்பூர், திரங்கானு, பினாங்கு, பேராக்) உள்ள பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.