ட்ரோன் இறக்குமதி தொடர்பில் அதிரடி தீர்மானம் ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, அவற்றுக்கான கட்டாய உரிமம் மற்றும் பதிவு நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி
அதேவேளை, சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ், வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மற்றும் குறிப்பிட்ட எடைக்கு அதிகமான ட்ரோன்கள் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வணிக மற்றும் தொழில்சார் தேவைகளுக்காக ட்ரோன்களை இயக்குபவர்களுக்கான உத்தியோகபூர்வ உரிம முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த உரிமத்தைப் பெறுவதற்கு தத்துவார்த்த தேர்வுகள் மருத்துவ மதிப்பீடுகள், பாதுகாப்பு அனுமதி மற்றும் செயல்பாட்டுத் திறன் மதிப்பீடுகள் ஆகியவற்றை நிறைவு செய்ய வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்திற் கொண்டும், தற்போதுள்ள சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும், ட்ரோன்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் போன்றவற்றில் ஈடுபடும் வணிக நிறுவனங்களை சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து கட்டமைப்பின் கீழ் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாகவே ட்ரோன் இறக்குமதிகளும் அவற்றின் செயல்பாடுகளும் அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதிகாரிகள், சட்டவிரோத இறக்குமதிகள் மற்றும் அனுமதியற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.