வரலாறு காணாத இயற்கையின் கோர தாண்டவம்; இந்திய கப்பலிடம் அவசர உதவி கோரும் இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டு இருக்கும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான் விக்ராந்த் இல் உள்ள உலங்குவானூர்திகளின் உதவிகளை கோரியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.

நிலநடுக்கம், மண்சரிவு மற்றும் கடும் வெள்ளம்
தொடர்ச்சியான கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதை முன்னிட்டு, விரைவான வான்வழி மீட்பு நடவடிக்கைகள் அவசியமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படையுடன் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்புகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கம், மண்சரிவு மற்றும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு செயல்பாடுகளை வலுப்படுத்த இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் பொலிஸ் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
அதேவேளை இலங்கை கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியாவின் விமானந் தாங்கி கப்பலான விக்ராந்த் கொழும்பு துறைமுகத்தில் நங்கூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.