இலங்கையின் வடக்கு கரையோரம்: இந்தியாவுக்கு எதிரான மனநிலை!
வடக்கின் கரையோரம் முழுவதும் இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. அதுவும் பருத்தித்துறை முனைப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாகவே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலினால் பல கோடி சொத்திழப்பை சந்தித்துக்கொண்டிருப்பதாக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் சொன்னார்கள். ஊடகங்களிடம் பேசினார்கள். மீனவ சங்கங்களின் ஊடாக அறிக்கை வெளியிட்டார்கள். யாழ். இந்திய துணைத்தூதரக வாசலில் போராடினார்கள். எம்பஸி போராட்டக்காரர்களுக்கு ஒரு மைலோ பக்கெற் மட்டும் கொடுத்தனுப்பியது. எந்தத் தீர்வையும் கிடைக்கவில்லை.
இந்திய இழுவைப்படகுகளினால் அறுத்தெறியப்படும் வலைகளுக்காக ஒரு சத நஷ்ட ஈட்டைத்தானும் கொடுக்கவில்லை எனவேதான் மீனவ மக்கள் இந்தியாவை எதிர்க்கின்றனர். வெறுக்கின்றனர். இதனைச் சரியாகக் கற்ற கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், தம் அதிகாரிகளை நேற்றைய தினம் பருத்தித்துறைக்கே அனுப்பியிருக்கிறது.
சாதாரண மக்களால் புகைப்படம் கூட எடுக்க முடியாத கடற்கரைப் பகுதியில் ட்ரோன் விட்டுக்காட்டியிருக்கிறது. "இங்கயிருந்து இந்தியா எவ்வளவு தூரம்" என்ற கேள்வியைக்கூட யதார்த்தமாக கேட்டிருக்கிறது.
பூகோள வரைபடமே அறிந்திராத அந்த சீனத்தூதரக அதிகாரிகளுக்கு "வெறும் 32 மைல்கள் தான்" என அப்பாவித்தனமான பதில்வேறு கிடைத்திருக்கிறது. நேற்றைய தினமே, சுற்றுலாவிகளின் தளமாக மாறிவிட்ட - யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமாகிய யாழ்.நூலகத்திற்கு வருகை தந்த சீன அதிகாரிகள், Virtual Library க்கு உதவத் தயார் என்றிருக்கின்றனர்.
அதற்கு அருகில் யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடமாகிய இந்திய பண்பாட்டு மண்டபம் திறக்கப்படாமல் நிமிர்ந்து நிற்கிறது. அது பேயாமல் நிற்கட்டும். இன்றையதினம், யாழ்ப்பாணத்தின் இன்னொரு கலாசார அடையாளமாகிய நல்லூர் ஆலயத்திற்கு, "ஒட்டிக்கோ கட்டிக்கோ" வேஷ்டியோடு களமிறங்கியிருக்கின்றனர்.
இராஜதந்திர பயணமாக யாழ்ப்பாணம் வரும் அதிகாரிகள் மேலாடையை கழற்றிவிட்டு ஆலயத்திற்குள் நுழையவே சிரமப்படும் நிலையில், "சும்மா ஒரு பயணமாக" வந்த சீன அதிகாரிகள் எடுக்கும் சம்பளத்துக்கு அதிகமாகவே செலவழித்திருக்கிறார்கள்.
இந்த செயற்பாடுகளே இன்றையதினம் யாழ்ப்பாணத்தின் சுவைகரமான செய்தி. இதன் விளைவாக, நல்லூருக்கு அருகில் உள்ள மருதடி பக்கமிருந்து எழுந்த தீய்ஞ்ச வாசணை இன்னும் மணந்துகொண்டிருக்கு என ரியோ ஐஸ்கிறீம் கடையில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் தெரிவித்ததாக இந்த கருத்துக்களை முகநூலில் பதிவிட்ட ஜனரா தம்பி (Jera thampi) கூறியுள்ளார்.
ஆனாலும் இந்த சீனர்கள் யாழ்ப்பாணத்தின் இன்னொரு கலாசார அடையாளமாகிய தம் கடை பக்கம் வரவில்லை என்ற ஏக்கம் அவரின் பேச்சில் தெரிந்தது.
இந்தப் பயணத்தினூடாக சீனா சொல்லவருவது என்னவென்றால், நாம் உங்களுக்கு (இந்தியா, தமிழர்கள்) மிக அருகில் வந்துவிட்டோம். படலையைத் திறவுங்கள். என அவர் கருத்தை வெளியிட்டுள்ளார்.