இலங்கையில் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
இலங்கையில் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டில் பெண்களுக்கான உதவி அழைப்பான 1938 இனூடாக மொத்தம் 2,182 பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி 2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சிற்குட்பட்ட தேசிய மகளிர் குழுவினால் (NCW) செயல்படுத்தப்படும் 1938 பெண்களுக்கான இலவச உதவி அழைப்பின்மூலம் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான 2,182 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

1938 பெண்களுக்கான இலவச உதவி அழைப்பு
இவற்றில், அதிகளவிலான முறைப்பாடுகள் வீட்டு வன்முறை தொடர்பில் பதிவாகியிருந்தன, அவை 1,488 முறைப்பாடுகள் ஆகும். அத்துடன், 234 இணையவழி குற்றச்செயல் தொடர்பான முறைப்பாடுகளும், 7 பாலியல் வன்கொடுமை (Rape) தொடர்பான முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும், தேசிய மகளிர் குழுவும், அரசு மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன், 24 மணி நேரமும் மூன்று மொழிகளிலும் செயற்படும் 1938 பெண்களுக்கான இலவச உதவி அழைப்பினை வலுப்படுத்தவும், அதனை மக்கள்மத்தியில் கொண்டுசேர்ப்பதற்குமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவற்றின் நோக்கம் விழிப்புணர்வை அதிகரித்து முறைப்பாடுகளை மேற்கொள்வதனை ஊக்குவிப்பதன் மூலம் பாலியல் மற்றும் பால்நிலையினை அடிப்படையாகக்கொண்ட வன்முறையினை (SGBV) ஒழிப்பதற்காக பணியாற்றுவதாகும்.
மேலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்வாதமானது நவம்பர் 25 ஆம் திகதி – பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதேவேளை இந்த 16 நாட்கள், டிசம்பர் 10 ஆம் திகதி– மனித உரிமைகள் தினத்துடன் நிறைவடைகின்றன, பெண்கள்மத்தியில் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கும், அவர்கள் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும்வகையில் அவர்களை வலுப்படுத்துவதற்குமான பல்வேறு செயற்பாடுகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இந்நாட்களில் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.