பாடசாலை விட்டு வெளியேறும் மாணவர்கள் தொடர்பில் பிரதமர் விசேட நடவடிக்கை
பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் தொடர்பில் முறையான தரவு அறிக்கையை தயாரிப்பது அவசியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
மஹரகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை இடையில் நிறுத்தும் மாணவர்கள் பற்றிய தெளிவான தகவல்கள் இன்றி, அந்த குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சரியான திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் சிக்கல் நிலவுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றும் முன்னர் பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் கல்வியை பாதியில் இடை நிறுத்துவதினால் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, சமூகப் பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பாடசாலையில் சாதாரண தரம் அல்லது உயர்தரம் வரையில் பதிவு செய்யப்பட்ட பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறினால் அதனை பிரதேச செயலக மட்டத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியம் எனவும், அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டியது கட்டாயம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.