95,000ஐ கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; பொது மக்களுக்கு வெளியான அறிவித்தல்
இலங்கையில் இந்த வருடம் இதுவரை 95,493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,157 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தில் டெங்கு காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு மரண வீதம் 0.076 சதவீதமாக பதிவாகியுள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு
மாகாண ரீதியில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 50,506 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டின் 50 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிகம் பரவும் அபாயப் பகுதிகளாக தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.