50 பவுன் தங்கம்....கட்டுக்காட்டாக பணம்; இணையத்தை மிரட்டிய தாய்மாமன் சீர்!
மதுரையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், 50 பவுன் தங்கம், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், 500 வகை சீர்வரிசை, 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி, மேலும் ரூ.60 லட்சம் மொய் பணம் லாரி, கார் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தாய்மாமன் சீர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தாய்மாமன் சீர் வழங்கும் நடைமுறையில், சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சார்பில் சீர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா
இந்நிலையில், மதுரை காதணி விழாவில் சிறுமியின் தாய்மாமன் மற்றும் தாத்தா சார்பில் சிறுமிக்கு மொய்யாக வழங்குவதற்காக ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.60 லட்சம் பணம் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பணப்பெட்டிகளை தலையில் சுமந்தபடி உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மொய் வழங்கியுள்ளனர். மேலும், 50 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், வெள்ளித் தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, சொகுசு கார், லாரிகளில் 500 வகையான சீர்வரிசை பொருட்கள், 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் சீர் வரிசையாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்டமான தாய்மாமன் சீர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.