பாதியில் காலை வாரிய செருப்பு ;மகள்களின் கல்விச் செலவு; வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயார்!
மகாராஷ்டிராவில் மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர், தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வருகிறார்.

பாதியில் காலை வாரிய செருப்பு
விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தற்போது தனது மகள்கள் கல்வி கற்கும் போட்டித் தேர்வு பயிற்சி நிலையத்தில் சமையல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், உள்ளூர் அமைப்பொன்று நடத்திய ‘அமிர்த தௌட்’ மரதன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பரிசுத் தொகையில் மகள்களுக்குப் புத்தகங்கள் வாங்கலாம் எனக் கருதிய ரமாபாய் போட்டியில் பங்கேற்றார்.
போட்டியின்போது அவரது செருப்புகள் கழன்று விழுந்த நிலையில் அறுந்த செருப்பை , கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் ஓடி, முதலிடத்தையும் பிடித்தார்.
இந்த போட்டியில் அவரது மகள் பூஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ரமாபாயின் ஒரு மகள் காவல்துறை பணிக்கான போட்டித் தேர்வுக்கும், மற்றொரு மகள் வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர்.
தனது வெற்றி குறித்து கருத்துரைத்த ரமாபாய், “போராடி இந்தப் பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண்முன் தெரிந்தது.
பரிசுத் தொகையில் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார். இன்னிலையில் மகள்களின் கல்விக்காகப் போராடி வரும் ரமாபாயின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.