ஒரேநாளில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பல மில்லியன் வருமானம் !
பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அன்றைய தினம் மாத்திரம் 2.5 மில்லியன் ரூபா சாதனை அளவிலான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா முறியடிப்பு
விலங்கியல் பூங்காவிற்கு வருகை தரும் வழமையான நாளாந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆகக் காணப்படும் நிலையில், அன்றைய தினம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை வழமையை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தை இந்த வருடத்தில் கடந்து செல்ல முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது விலங்கியல் பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கான உள்ளக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்காக தினசரி விசேட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பல்வேறு விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், தற்போது பூங்காவில் பற்றாக்குறையாக உள்ள ஒட்டகச்சிவிங்கிகளுக்காக எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் உகாண்டாவிலிருந்து இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளையும், ஆர்மீனியாவிலிருந்து ஒரு ஜோடி வரிக்குதிரைகளையும் (Zebras) நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.