இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான உபாலி தர்மதாச, தனது 71ஆவது வயதில் காலமானார்.
இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய அவர், பல தசாப்தங்களாக வணிக நிர்வாகத் துறையில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருந்தார்.
நாட்டின் உயர்மட்ட வணிக சமூகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த அவர், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCSL) தலைவராகவும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவராகவும் பணியாற்றிய அவர், நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய முயற்சிகளை முன்னெடுத்ததுடன், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.
அத்துடன், இலங்கை காப்பீட்டு கூட்டுத்தாபனம் (SLIC) நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
வணிகத் துறையில், நவாலொக்க குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக நீண்டகாலம் செயற்பட்ட அவர், நவாலொக்க பைலிங் லிமிடெட், நவாலொக்க டிம்பர் ஸ்டோர்ஸ் லிமிடெட், நவாலொக்க பாலிசாக்ஸ் லிமிடெட், நவாலொக்க இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நியூ நவாலொக்க டிரேடிங் கோ லிமிடெட் மற்றும் நவாலொக்க டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
உபாலி தர்மதாசவின் மறைவு, இலங்கையின் கிரிக்கெட் மற்றும் வணிகத் துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.