இலங்கையில் புதிய சுகாதார விதிமுறைகள் வெளியீடு
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வியாழக்கிழமை (16-12-2021) முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய திருமண வைபவங்களில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதோடு, மரண சடங்குகளில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை 20 இலிருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சுகாதார விதிமுறைகள் மாற்றங்கள் இன்றி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக புதன்கிழமை (15-12-2021) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டது.
பின்னர் சில மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய திருமண வைபவங்களில் மண்டபத்தின் கொள்ளளவில் 50 சதவீதமானோர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, இதன் போது மது பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
மேலும் மரண சடங்குகளில் அதிகபட்சம் 30 பேர் கலந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளரங்க வைபங்களிலும் மண்டபத்தின் கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு அனுமதி வழங்க முடியும்.
அதே போன்று ஹோட்டல்களிலும் 50 வீதமானோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடைகள், மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் 50 சதவீதமானோரை அனுமதிக்க முடியும்.