சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து நாடு முழுவதும் விசேட போக்குவரத்து சேவைகள்
எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், புத்தாண்டு காலப்பகுதிக்காக சுமார் 1500 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களை மையப்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. தொடருந்து திணைக்களமும் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறிப்பாக, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு வழித்தட தொடருந்து சேவைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வானூர்திப் படையின் உழைப்புப் பங்களிப்புடன், சுமார் 424 மில்லியன் ரூபா செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு (Pettah) மத்திய பேருந்து நிலையம் எதிர்வரும் புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் - நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாகவும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் அடுத்த வாரம் முதல் தனியார் பேருந்துகளுக்கான விசேட புத்தாண்டு போக்குவரத்துத் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.