சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு ; ஒரு மாதத்தில் 31 பேர் கைது
கடந்த ஒரு மாத காலமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இது குறித்துத் தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் நேற்று (04) வரையான காலப்பகுதியில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த முற்றுகைகளின் போது மொத்தம் 52,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அதன்படி டீசல் 47,006 லீற்றர்,பெற்றோல் 2,668 லீற்றர்,மண்ணெண்ணெய் 2,706 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளன.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருளைச் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களைக் கண்டறியும் நோக்கில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறியத் தொடர்ந்தும் விசேட சோடதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.