கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, இன்றும், எதிர்வரும் 24 மற்றும் 27 ஆம் திகதிகளிலும், கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு அரங்கை அண்மித்த வீதிகளில் இந்த விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் அமுல்படுத்தப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, கெத்தாராம வீதி, 100 அடி வீதி, போதிராஜ மாவத்தை, வின்சன்ட் பெரோரா மாவத்தை, பிரிட்டோ பாபபுல்லே வீதி ஆகியவற்றில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த வீதிகள், மூடப்படவோ அல்லது, போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவோ மாட்டாது எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, நண்பகல் 12 மணி முதல் , போட்டி நிறைவடையும் வரை குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்வதற்கு, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு, வாகன சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.