கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறை
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள 'சமாதானத்திற்கான நடைபயணம்” நிகழ்வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, பொரளை நகர் மற்றும் அதனை அண்மித்த வீதிகள், தேசிய நூலக வீதி ஊடாக கங்காராம விஹாரை வரையான பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வு
ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நிகழ்வு, இன்று மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.
இன்று முற்பகல் 11.00 மணி முதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, கொழும்பு நகர் மற்றும் நடைபயணம் முன்னெடுக்கப்படும் பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.