சபையில் இடையூறு செய்பவர்கள் குறித்து சபாநாயகர் கடும் எச்சரிக்கை
சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரை கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது, அமைச்சர் வசந்த சமரசிங்க உரையாற்றுகையில், சுஜீவ சேனசிங்க மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் தொடர்ச்சியாக ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்த போதே சபாநாயகர் இவ்வாறு எச்சரித்தார்.
அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சுஜீவ சேனசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி எழுந்த போது, உங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இதனால் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முடியாது என்று சுஜீவ சேனசிங்கவுக்கு சபாநாயகர் கூறினார். எனினும் சுஜீவ சேனசிங்க தொடர்ந்தும் எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார். இவ்வேளையில் தயவு செய்து நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்.
நீங்கள் இங்கே இடையூறுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தால் உங்களை வெளியேற்ற நேரிடும் என்று எச்சரித்தார். இதேவேளை அர்ச்சுனா இராமநாதன் எம்.பியும் தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார்.
அது ஒழுங்குப் பிரச்சினை அல்ல. இதனால் அமைச்சரை தொடர்ந்தும் பேசுமாறு சபாநாயகர் கூறிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்தும் அர்ச்சுனா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்த போது, நீங்களும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் இங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் கூறினார்.