வட மாகாணத்தில் தென்கொரிய முதலீட்டாளர்கள் ; ஆளுநர் வெளியிட்ட தகவல்
தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
தொழிற் பயிற்சி
அவர்கள் இங்குள்ள நிறுவனங்கள் ஊடாகவே தமது முதலீட்டை மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர்.
இங்குள்ள இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான தொழிற் பயிற்சியை இங்குள்ள தொழிற் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் ஊடாக வழங்குவதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
எனவே அவர்கள் இங்கு எவ்வகையான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் ஆராய்வதற்காகவே கலந்துரையாடல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.