மாமியாரின் கஞ்சத்தனத்தை மாற்றிய மருமகனின் நூதன உத்தி
காலி நகருக்கு அருகிலுள்ள கிராமமொன்றில், மாமியாரின் கஞ்சத்தனத்தைப் போக்க மருமகன் ஒருவர் கையாண்ட வித்தியாசமான உத்தி அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
குறித்த பெண், தனது மகளுக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருவதுடன், தனக்குக் கிடைக்கும் பொருட்களை வீட்டில் பயன்படுத்தாமல் சிறிய கபோர்ட் ஒன்றில் சேமித்து வைத்துப் பாதுகாத்து வந்துள்ளார்.
கஞ்சத்தனத்தைப் போக்க
உறவினர்கள் வழங்கும் மா, சீனி, தேயிலை, பிஸ்கட், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களைக்கூட வீட்டில் பயன்படுத்த அனுமதிக்காமல் கபோர்ட்டில் பூட்டி வைத்துள்ளார்.

இதனால், சில நேரங்களில் பால்மா பொதிகள் காலாவதியாகி வீணாகியுள்ளன. ஒருமுறை மகளுக்குத் தெரியாமல் கபோர்ட்டிலிருந்து சவர்க்காரக் கட்டி ஒன்றை எடுத்தபோது, தாயாரிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.
இதையடுத்து கபோர்ட்டின் சாவியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட மாமியார், அதனைப் பாதுகாப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்வதையும் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மகனின் வீட்டில் தர்ம நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் கலந்துகொள்ளுமாறு மாமியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து உறுதியான பதிலை வழங்காமல் இருந்துள்ளார். இதனால், தாயாரை எப்படியாவது நிகழ்வுக்கு அழைத்து வரும் பொறுப்பை மருமகனிடம் மகன் ஒப்படைத்துள்ளார்.
தர்ம நிகழ்வு நடைபெற்ற நாளன்று மாமியாரைத் தயாராகுமாறு மருமகன் அழைத்தபோதும், அவர் செல்ல மறுத்துள்ளார். இதையடுத்து, மீண்டும் அவரிடம் சென்ற மருமகன், “அம்மாவுக்கு இந்தக் கபோர்ட்தான் பிரச்சினை.
அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். நீங்கள் தயாராகுங்கள்” எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சிறிய உழவு இயந்திரமொன்றில் வீட்டுக்கு வந்த மருமகன், “அம்மா, நீங்கள் தயாராகுங்கள். கபோர்ட்டையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தர்ம நிகழ்வு நடைபெறும் வீட்டுக்குச் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட மாமியார் அதிர்ச்சியடைந்ததுடன், கபோர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், தாம் மட்டும் நிகழ்வுக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
மாமியாரை நிகழ்வுக்கு அழைத்து வருவதற்காக மருமகன் கையாண்ட இந்த வித்தியாசமான உத்தி, அங்கு கூடியிருந்த உறவினர்களிடையே சிரிப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.