முளைக்கட்டிய பயறுகளில் இவ்வளவு நன்மைகளா!
ஊட்டச்சத்துக்களும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவாக முளைக்கட்டிய தானியங்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவு இது.
குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்கள் உடலுக்கு வலிமை சேர்ப்பதற்காக அதிகளவில் இதை சேர்க்கின்றனர். இவற்றிலுள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மை கொண்ட என்சைம்ஸ், அதிகளவில் உள்ளது.
பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுவதால் செரிமானம் எளிதாகிறது.
பொட்டாசியச் சத்து உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது. அதோடு உயர் ரத்த அழுத்தம், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்கவும் உதவுகிறது. முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட நீரிழிவு பிரச்னைக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. முளை விட்ட கோதுமை புற்று நோய் தாக்கத்தை குறைக்கும். முளை விட்ட எள், வேர்க்கடலை சாப்பிட உடல் எடை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை சாப்பிட உடல் வலிமை அதிகரிக்கிறது. முளை விட்ட கருப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். முளை விட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் எடையை குறைப்பதுடன், மூட்டு வலி நீங்க உதவுகிறது.
இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வேர்க்கால்களில் வளர்ச்சியை தூண்டுவதால் கூந்தலின் அடர்த்தி, நீளத்தை ஊக்குவிக்கிறது. கூந்தல் உதிர்வு, வறட்சித்தன்மை, பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவுகிறது. வைட்டமின் சி உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்துக்கு நெகிழ்ச்சித்தன்மையை அளித்து இளமை தோற்றத்தை தருகிறது.
இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் சருமத்துக்கு பளபளப்பை அளிக்கின்றன. எந்த தானியமாக இருந்தாலும் அதை நன்றாகக் கழுவி, எட்டு மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் மெல்லிய காட்டன் துணியில், ஊறிய தானியங்களை கட்டி நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்தால் எட்டு மணி நேரத்தில், பயிர்கள் முளைவிட துவங்கும். ஒருசில தானியங்கள் முளைவிட அதிக நேரம் எடுக்கும். அப்போது அவ்வப்போது தேவையான தண்ணீர் தெளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தானியங்கள் காய்ந்துவிடும்.
இவ்வாறு முளைவிட்ட தானியங்கள் மற்றும் பயிறு வகைகளை, அப்படியே சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இவற்றை வேகவைத்து சாப்பிடும் போது முழு சத்துகள் கிடைக்காவிட்டாலும், அதில் பாதியாவது கிடைக்கும்.
குறிப்பு;-
முளைவிட்ட பயறுகளின் நிறம் சிறிது மாறியிருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ அவற்றை தவிர்க்க வேண்டும். இவை செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதுடன் உடம்புக்கு ஏதாவது அஜீரண கோளாறுகளையும் கொடுக்கலாம்.