அதிரடியாக கைது செய்யப்பட்ட ஷிரான் பஸிக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்
48 வயதுடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பஸிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CCID) அனுமதி பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
தெஹிவளையைச் சேர்ந்த ஷிரான் பஸிக், டுபாயில் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக CCID அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனிடையே, ஈரானுடனான மோதல் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டுபாயில் உள்ள சொகுசு ஷாப்பிங் வளாகமொன்றில் இருந்தபோது, டுபாய் காவல்துறையினரால் தாம் வழிமறித்து விசாரிக்கப்பட்டதாக பஸிக் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது அலைபேசியைச் சோதனையிட்ட டுபாய் காவல்துறையினர், ஈரானியத் தாக்குதல்கள் தொடர்பான படங்களைக் கண்டறிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தாம் கைது செய்யப்பட்டதாகவும் பஸிக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஈரானுடன் தமக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து, இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையில் டுபாய் காவல்துறையினர் தினமும் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பஸிக்கின் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் CCID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.