தமிழ் எம்பியால் நாடாளுமன்ற அமர்வில் சலசலப்பு; கொதித்தெழுந்த அருச்சுனா
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என தெரிவித்து அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் .
மட்டக்களப்பில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சபையில் சாணக்கியன் எம்.பி கூறுகையிலேயே சபாநாயகர் இடைமாறித்தார்.
கொதித்தெழுந்த அருச்சுனா
இதன்போது எழுந்த அர்ச்சுனா எம்.பி எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்புக்களை தரமறுத்து ஏனைய எம்.பிக்கள் வாய்ப்புக் கேட்டால் அவர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறீர்கள்.
நாங்கள் வாய்ப்பு கேட்கும் போது வாய்ப்பை தர மறுப்பது ஏன் என சபாநாயகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சபை நடவடிக்கைகளை இடையூறு செய்யும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் , அர்ச்சுனா எம்பி ஆக்ரோஷமாக கருத்துக்களை பரிமாறியபோது, "உங்கள் இருவரையும் அவையில் இருந்து வெளியேற்ற நான் கட்டாயப்படுத்தப்படுவேன்" என்று சபாநாயகர் கூறினார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கிலும் நீதிக்கு புறம்பான கொலைகள் இடம்பெறுவதாக ஆக்ரோஷமாக தமது கருத்துக்களை முன்வைத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பிக்கு வாய்ப்ப்பு வழங்க கோரியதை அடுத்து , இறுதியாக சாணக்கியன் எம்.பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதேவேளை இதன்போது சாணக்கியனுக்கு ஆதரவாக சபையில் கொதித்தெழும்பிய அர்ச்சுனா எம்பி, சபாநாயகரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.