பள்ளி மைதானத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; கபடி பயிற்சியாளர் கைது
இந்தியா - கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசாரணை
38 வயதான கபடி பயிற்சியாளர் கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அத்துடன் அவர் சூலூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி அளித்து வருகிறார்.
கடந்த 2 மாதமாக குறித்த கபடி பயிற்சியாளரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவிகளை வேறுவிதமாக பார்த்து வந்தார். அத்துடன் அவர் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள், பள்ளியில் உள்ள மைதானத்தில் தனியாக இருந்த போது அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன் என்று அழைத்துச் சென்று அந்த 4 மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியையிடம் முறைபாடு அளித்துள்ளனர். அதை கேட்டு தலைமை ஆசிரியை உடனடியாக அவர் இது குறித்து கருமத்தம்பட்டி மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்துள்ளார்.
பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கபடி பயிற்சியாளர் பயிற்சி கொடுக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து பொலிஸார் அருண்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.