கிழக்கு, வடக்கு பகுதிகளில் கடும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிற்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அதிகரித்துக் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக உடல் நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால், பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துதல், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.