கனடாவில் பாடசாலை அருகே துப்பாக்கிதாரி: சுட்டுக்கொன்ற பொலிசார்
கனடாவின் ஸ்காபரோ போர்ட் யூனியன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு அருகே துப்பாக்கிதாரி ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தால் அருகிலுள்ள பள்ளிகள் பல மூடப்படும் நிலை ஏற்பட்டதுடன் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அவதிக்குள்ளாகினர்.
மதியம் சுமார் 1 மணியளவில் ஸ்காபரோ போர்ட் யூனியன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு அருகே துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், குறித்த நபரை அடையாளம் கண்டுள்ளதுடன், ஒருகட்டத்தில் ஆயுததாரி மீது பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் அந்த நபர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு இருந்த அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரி 20 வயது கடந்த இளைஞர் எனவும் மேலதிக தகவல்கள் விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இதனிடையே, பொலிசார் மீது அந்த நபர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாலையே, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் சுமார் 3 மணி வரையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதுடன், பெற்றோரை தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல கேட்டுகொண்டதாக தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் இரு ஆசிரியர்கள் மற்றும் 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.